Thursday, March 28, 2013

அல்வா அழகிரிக்கா... அதிமுவுக்கா....!




"ஆசைக்கு ஒன்று.. ஆஸ்திக்கு ஒன்று..." அடுத்த குழந்தை இப்போது வேண்டாம்... இரண்டுக்கு பிறகு எப்போதும் வேண்டாம்" இது தமிழ் நாட்டு அரசாங்கத்தின் குடும்பக் கட்டுபாடு திட்டம்.

அடித்தட்டு மக்கள் இதக் கடைப்பிடிக்கிறாங்களோ இல்லையோ கண்டிப்பாக அரசியல்வாதிகள் கவனத்தில வைச்சிருக்கனுமுங்க.. இல்லாட்டி இந்த தொன்னூறு  வயசில கண்ணீரோடு காலத்தைக் கழிக்க வேண்டிய கட்டாயம் கலைஞர் கருணா நிதிக்கு ஏற்பட்டிருக்குமா?

செயற்குழுவாவது மண்ணாங்கட்டியாவதுன்னு அழகிரி... அழுகிரியா மாறி மதுரைக்கு ஜூட் விட்டுட்டாரு.. தலைவரு உத்தரவு போட்டா தீக்குளிக்கக் கூட தயாரா இருக்கான் திமுக தொண்டன்.



ஆனா ஆசையா பெத்த மகன் மீசையை முறுக்கிக் கிட்டு கிளம்பிட்டாரு.. தொண்டனுக்குன்னா முரசொலியில கண்ணீர் கடிதம் எழுதி வென்னீர் ஊத்தியிருப்பாரு.. இங்க அந்தப் பருப்பு வேகலை...

தந்தைக்கும் மகனுக்கும் நடுவில நடக்கும் பிரச்சினையை வச்சு கந்தர்ப்பம் சுட்டுப் பாக்கலாமுன்னு ஜெயலலிதா நினைக்கிறாருங்க. 2001 ல இது சாத்தியப்பட்டிருக்கலாமுங்க. ஆனா. இப்ப அழகிரிக்கு அல்வா குடுக்க முடியுமா?

அன்னைக்கு அவரு அரசியல்ல கத்துக்குட்டிங்க.. இப்ப அப்படி நினைக்க முடியாதுங்க. சந்தேகக் கேசுல ஜெயிலுக்கு போயி தில்லாலங்கடி தாதாவாக திரும்பி வந்த மாதிரி டெல்லி அரசியல் அவரைக்  கில்லாடி அரசியல்வாதியாக மாத்தி இருக்க நிறைய வாய்ப்பு இருக்குங்க.



இந்த நிலையில அவரை வச்சு பகடையாட அதிமுக நினைக்கிறது.. சண்டி மாட கட்டி வண்டி இழுக்க முயற்சிக்கிறதுக்கு சமமுன்னு அரசியல்களத்தில நிக்கிற அடிமுட்டாள் தொண்டனுக்கு கூட நல்லா தெரியுமுங்க.

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடனே பெரிய  பெரிய திமுக தலைவருங்களை எல்லாம் கபக்கு கபக்குன்னு அள்ளி ஜெயில்ல போட்டாங்க. மத்திய அமைச்சரா இருந்ததால அழகிரிக்கு அந்த சிக்கல் வரலை.

இப்ப அமைச்சர் பதவி அம்பேல்.. ஆனா.. அவரை தூக்க அதிமுக விரும்பலை. கழகத்தில அவரு செய்யிற கலகம் நாடாளுமன்ற தேர்தலில நல்ல அறுவடைய தரும்கிறது அதிமுக தலைமையின் கணக்கு.

ஆனா.. அது தப்புக்கணக்குங்கிறது எதிர்காலம் உணர்த்தப் போகிற உண்மைங்கிறதை அதிமுக உணருவது புத்திசாலித்தனுமுங்க..

அழகிரி தலைமைப்பதவிக்கு அடம்பிடிப்பாரு.... ஆத்திரப்படுவாரு.. ஆவேசப்படுவாரு.... அதே நேரத்தில அதுக்காக திமுக அஸ்திவாரத்துக்கு வெடி வச்சாருன்னா.. பாதிக்கப்போற முதல் ஆள் அவருதாங்கிறத அவரைச்சுத்தி இருக்கிறவங்க நல்லாவே சொல்லி இருப்பாங்க.

அல்வா திங்கப் போறது அழிகிரியா... அதிமுகவா... பொறுத்திருந்து பார்ப்போம்..






காங்கிரஸ் புளுக்கு.... அமெரிக்கா சுளுக்கு.... !



"செத்தவன் காலு செமக்கிறவன் தலைமேலே"ன்னு ஒரு பழமொழி இருக்குங்க... இந்தப் பழமொழிக்கு பொருத்தமானவங்க நம்ம தமிழ் நாட்டு காங்கிரஸ் தலைவர்களுங்க..

டெல்லி தலைவருங்க என்ன சொல்றாங்களோ.. அப்படியே ஆமா போடுறதில.. இவங்களுக்கு இணையா உலகத்தில யாரையும் சொல்ல முடியாது.

தலையாட்டி தலையாட்டி தஞ்சாவூர் பொம்மையே தலைகுனிற அளவுக்கு கழுத்துல சுளுக்கு புடிச்சவங்க..



இலங்கைக்கு எதிரா அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துல என்ன இருக்கிறதுன்னு தெரியாது. இது டெல்லி காங்கிரஸார் பல்லியா கத்திய வாசகம்.

இங்க ஞானதேசிகன்... தங்கபாலுன்னு எல்லாரும் இந்தக் கருத்தை வாசனை மாறாம வாந்தி எடுத்தாங்க..

உலகப் பெருந்தலைவர் கலைஞர் கருணா நிதிகூட இந்த வாந்தியைப் பிடித்து தன் பங்குக்கு பந்தி வைத்தாருங்க.

ஆனா... இப்ப அமெரிக்ககாரன் என்ன சொன்னான் பாத்திங்களா.. நாங்களும் இந்தியாவும் சேர்ந்துதான் தீர்மானத்தையே தீர்மானித்தோம். இந்தியாவுக்கு தெரியாம நாங்க தீர்மானம் போடுறதா... சட்டியத் தூக்கி சட்டுன்னு கவுத்துப்புட்டான்.

சரி... இதுக்கு முன்னாடி ஆந்தை மாதிரி அலறுன காங்கிரஸ் கரிச்சான் குஞ்சுங்க இப்ப என்ன சொல்லும். சாணின்னு நெனைச்சு 'ஆயி' ல்ல கையை வச்ச கதையா அலங்க மலங்க முழிச்சிக்கிட்டு இருக்குமுங்க..



அமெரிக்ககாரன் எப்படி சித்து விளையாட்டு காட்டுறான் பாத்திங்களா... அவன் நினைச்சா ஒரு நிமிசத்தில ராஜபக்சேவை குற்றவாளியாக்கி சதாம் உசேன் மாதிரி சட்னி பண்ண முடியுமுங்க.

அதனால அவனுக்கு என்ன லாபம். இந்தியாவுக்குள்ள இருக்கிற ஜனங்க அடிச்சுக்கிட்டு தலையப் பிச்சுக்கிட்டாத்தானே அவன் வந்து பஞ்சாயத்து பண்ண முடியுமுங்க.

என்ன எழவோ... அன்னைக்கும் இன்னைக்கும் என்னைக்கும் செத்துக்கிட்டு இருக்கிறது நம்ம தமிழ் ஜனங்கதானுங்களே...

ஆனா... இந்த அரசியல்வாதிங்க என்னைக்கும் திருந்தவும் மாட்டாங்க. வருந்தவும் மாட்ட்டாங்க.. ஏன்னா.. அவங்களுக்கு மனச்சாட்சி இருந்தாத்தானே.. அது சரி மனசுன்னு ஒன்னு இருந்தாத்தானே மனச்சாட்சி இருக்குமுங்க....