Tuesday, September 29, 2009

மருத்துவரை அடிக்கலாமா?

கடலூரில் ஒரு சம்பவம். அரசாங்க மருத்துவமனைக்கு வைத்தியம் பாக்க வந்தவங்க அங்கிருந்த மருத்துவர் கன்னத்திலே ஒரு அப்பு அப்பிட்டு போயிட்டாங்க. இதனால அந்த மருத்துவமனை மருத்துவர்கள் எல்லாம் வேலை நிறுத்தம்.


ஒரு மருத்துவரை அடிப்பது மாபெரும் தப்புங்க. மருத்துவர் ஆண்டவனுக்கு அடுத்த இடத்தில இருப்பவருங்க. ஆனா, அவரையே அடிக்கிற நிலைமைன்னு அந்த மருத்துவர் என்ன பண்ணியிருப்பாரு. போக்கிரி படத்தை மனசுல போட்டு பாருங்க. புரியும்.

படிப்பறிவு இல்லாத அப்பாவி ஜனங்களுக்கு பக்குவம் ரொம்ப இருக்காதுங்க. தெய்வமா நினைக்கிற ஒருத்தர் எமனா மாறினாருன்னா ஆத்திரத்தில அடிதடி வரைக்கும் இறங்கிடுறாங்க.

வேலை நிறுத்தம் செய்யுற மருத்துவர்களே கொஞ்சம் எண்ணிப் பாருங்க. உங்களுக்கும் ஒரு தனிப்பட்ட மனிதருக்கும் பிரச்சினை. இப்ப வேலை நிறுத்தத்தாலே எத்தனை பேரோட வயித்தெறிச்சலையும் கோபத்தையும் கொட்டிக்கப் போறீங்க. நீங்க சம்பளம் வாங்கிறதே பொது மக்களோட வரிப்பணத்திலாங்கிறத மறந்திடாதீங்க.

மருத்துவர்கள் எல்லாம் மனச்சாட்சியோட நடந்துக்கிட்டாங்கன்னா...ஏமை பாழைங்க உங்களை இதயத்தில கோவில் கட்டி கும்பிடுவாங்க. அப்படி மனச்சாட்சியோட நடக்கிறீங்களான்னு ஒரு தரம் நெஞ்சில கையை வச்சு பாருங்க.

இதுமாதிரிதான் ஏர் இந்தியா விமான ஓட்டுனருங்க வேலை நிறுத்தமும். இதில் பாதிக்கப்படுறது யாரு. வெளி நாட்டுக்கு சுத்திப் பாக்க போறங்களப் பத்தி பிரச்சினை இல்லைங்க. இன்னைக்கு இல்லாட்டி நாளைக்கு போயிருவாங்க.

வாயைக் கட்டி வயித்தக் கட்டி வட்டிக்கு வாங்கி கொடுத்த பணத்தில வெளிநாட்டுக்கு வேலைக்கு போறவங்களோட விசா முடிஞ்சு போச்சுன்னா என்ன ஆகுமுங்க. உங்க போராட்டத்தில நியாயம் இருக்கலாம். அது பொது மக்களப் பாதிக்காத வண்ணம் இருந்தா நல்லா இருக்குமுங்க.

யாரு போராட்டம் நடத்தினாலும் பொது மக்களை மையமா வச்சு நடத்துறாங்க. ஆனா, பொது மக்கள் யாரை மையமா வச்சு போராட்டம் நடத்துவாங்க. அது தெரியாததாலதான் இன்னமும் இளித்தவாயர்களா இருக்காங்க. நான் எழுதி இருக்கிறதுல்ல தப்பு இருந்தா என்னை மன்னிச்சுடுங்க.

Monday, September 28, 2009

பணத்தை உறிஞ்சுங்க...பண்பாட்டை உறிஞ்சாதீங்க

என்னோட நண்பன் ஒருத்தன் நடிகர் கமலஹாசனைப் பத்தி காரசாரமா ஒரு கருத்தைச் சொன்னான். அது தேவையில்லாத விஷயமா இருந்தாலும் அதில் இருந்த உண்மை கொஞ்சம் மனசுக்கு நெருடலா இருந்துச்சு. அதனால அவன் சொன்னதை அப்படியே உங்க பார்வைக்கு வைக்கிறேங்க.


கமலஹாசன் சமீபத்தில ஒரு அருமையான கருத்தைச் சொல்லி இருக்காருங்க. அது மட்டும் எனக்கு ரொம்பப் பிடிச்சு இருக்குங்க. வாழ்க்கையில நடக்கிறதை இயல்பா நடிக்கணும். ஆனா, இந்த தமிழ ஜனங்களுக்கு அது புரிய மாட்டங்குதுன்னு ரொம்ப வருத்தப்பட்டிருக்கிறார்.





குளியல் அறையிலே எப்படிக் குளிக்கிறமோ அப்படியே காண்பிக்க முடியுங்களா. முதலிரவுக் காட்சி கூடத்தான் எல்லா குடும்பங்கள்லயும் நடக்குது. அதை இயல்பா சொல்றேன்னு அப்படியே எடுத்துக் காட்ட முடியுமா...சினிமா நடிகனை கடவுளா பாக்கிற பாமர மக்கள் வசிக்கிற பூமிங்க தமிழ் நாடு. நீங்க தாவித் தாவி அடிக்கிறதையும் கூவிக் கூவி உதைக்கிறதையும் அப்படியே உண்மைன்னு நம்பி வச்ச கண்ணு வாங்கமா பாக்கிற அப்பாவி ஜனங்கள்கிட்ட மிச்சமிருக்கிறது நம்மோட மண்ணின் பண்பாடு மட்டும்தான்.

சினிமா நடிப்பை நம்பி 80 சதவித மக்கள் சீரழிஞ்சுக்கிட்டு இருக்கிறாங்க.
நீங்க என்ன பண்ணினாலும் எத்தனை மனைவி கட்டினாலும் எத்தனை பிள்ளைங்க பெத்தாலும் அது பரம்பரையா பாமர மக்களின் பணத்தை உறிஞ்சத்தான் போகிறது. பணத்தை மட்டும் உறிஞ்சுங்க. பண்பாட்டை உறிஞ்சிறாதீங்க. நீங்க எப்படி வேண்டுமானாலும் இருந்து தொலைங்க. உங்களை மாதிரி மக்களை மாத்திராதீங்க. இது தாங்க அவன் சொன்னது. இதுல உங்களுக்கு ஏதேச்சும் மறுப்பு இருந்தா என் நண்பனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேங்க. ஏன்னா நானும் தமிழன் தானுங்களே.

தலைத் தீபாவளி

"ஏண்டி இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி இருப்பே...ஒன்னு சொந்தப்புத்தி வேணும். இல்லாட்டி சொல் புத்தி வேணும். இரண்டுமே


இல்லாட்டி என்ன பண்ண முடியும்"

கலாவின் வார்த்தைகள் இப்படி கடுமையாக வந்து விழுந்தன. ஆனால் இதைக் காதில் வாங்காதது போல் இருந்தால் சுமதி.

" என்னடி நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன். நவராத்திரிக்கு பிடிச்சுவச்ச கொழுக் கட்டை மாதிரி உட்கார்ந்துக் கிட்டு இருக்கே"

சுமதியின் முடியைப் பிடித்து இழுத்து அவளுடைய முகத்தை தன்பக்கம் திருப்பினாள் கலா.

"இஷ்...விடுங்கக்கா வலிக்குது. நான் என்ன செய்யட்டும் அக்கா... வீட்டில சொல்றதத்தானே கேட்க முடியும். என்னோட இஷ்டத்துக்கு எதுவும்

செய்யமுடியுமா"

சுமதி சாதாரணமாக பேசினாலும் அந்தப் பேச்சில் ஒரு இனந்தெரியாத சோகம் இழையோடிக் கொண்டிருப்பதை கலாவால் உணர முடிந்தது.

கலாவும் சுமதியும் கோலாலம்பூரில் ஒரு வங்கியில் பணி புரிகிறார்கள். கலாவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. சுமதிக்கு இன்னும்
திருமணம் ஆகவில்லை.

இந்தா... அந்த... என்று வயது இருபத்தி எட்டைத் தொட்டு விட்டது. திருமணம் ஆகவில்லை என்பதற்காக சுமதி சுமாராக இருப்பாள் என்று தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள். பார்ப்பவர்களைச் சுண்டி இழுக்கக்கூடிய கொள்ளை அழகு.

அதே வங்கியில் வேலை பார்க்கும் பார்த்திபனுக்கு சுமதி மீது ஒரு கண். எப்படியாவது அவளுடைய மனதைத் திருடி அவர்கள் வீட்டுக்கு மருமகனாகி விட வேண்டும் என ஆசைப்பட்டான்.

எவ்வளவோ முயன்றும் சுமதியிடம் அவனால் நெருங்க முடியவில்லை. எதிரே பார்த்துக் கொண்டால் ஒரு புன்னகைதான். அதற்குமேல்

சுமதியிடமிருந்து எதையும் பெற முடியவில்லை.

அரசல் புரசலாக பார்த்திபனின் ஆசையைப் புரிந்து கொண்ட கலா மெதுவாக சுமதியிடம் பேச்சை எடுத்தாள். ஆனால் இதுமாதிரி பேச்சு வந்தால் சுமதி பட்டென்று வெட்டி விடுவாள்.

"பாரு சுமதி...பார்த்திபன் ரொம்ப நல்ல பையன். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. மத்தவனுங்க மாதிரி பிக்கப்பு...டிராப்பு ... எஸ்கேப்புன்னு போற பார்ட்டி கிடையாது. நீ மட்டும் சரின்னு சொன்னா உன்னைய கண்ணுக்கு கண்ணா வச்சு பாத்துக்குவான்"

பார்த்திபன் பேச்சை எடுத்தால் சுமதியின் கண்ணுக்குள் ஒரு பல்பு எரியும். அதை சாமர்த்தியமாக மறைத்துக் கொள்வாள்.

"அக்கா... நான் என்ன ஆசையில்லாத ஜடமுன்னா நினைச்சீங்க. எனக்கும் மத்த பொண்ணுங்க மாதிரி கல்யாணம் பண்ணி வாழக் கூடாதுன்னா
இருக்கேன்.எங்க அப்பாவும் அம்மாவும் ஜாதி பாக்கிறவங்க. எங்க ஜாதிப் பையனுக்குத்தான் என்னைக் கட்டிக் கொடுக்கணுமாம். எத்தனையோ நல்ல
மாப்பிள்ளை வந்தும் இந்த பாழாய்ப்போன ஜாதியாலே தட்டிப் போய்க்கிட்டே இருக்கு. என்னையப் பெத்தவங்களோ ஜாதியில் பிடிவாதமா
இருக்காங்க. அவங்கள மீறி போறதுக்கும் என்னோட மனசு கேட்க மாட்டேங்கிறது. நான் என்ன செய்யட்டும். சொல்லுங்க அக்கா..."

சுமதியின் கண்களில் இருந்து முத்து முத்தாக கண்ணீர்த்துளி கன்னத்தில் வழிந்தது. கலாவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. சுமதியின் பெற்
றோர்கள் மிகவும் நல்லவர்கள். சுமதி மீது பாசத்தைக் கொட்டி
வளர்த்தார்கள் இந்த ஒரு விஷயத்தில் மட்டும்தான் அவர்கள் ஏறுக்கு மாறாக இருக்கிறார்கள்.

காலம் உருண்டது. சுமதிக்கும் வயது ஏறியது. காதோரத்தில் ஒன்றிரண்டு நரைமுடிகள் எட்டிப் பார்த்தன. ஆனால் அவளின் அழகும் வனப்பும் மட்டும்
அப்படியே இருந்தன. வேளை மாற்றலாகி ஜொகூருக்கு போய்விட்டாள்.

தீபாவளி வந்து விட்டது. சுமதி தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பாகவே கோலாலம்பூருக்கு கிளம்பினாள். பேருந்து புடுராயா நிலையத்தில் வந்து
நின்றது.பெட்டியை எடுத்துக் கொண்டு இறங்கியவள் அப்படியே திகைத்து நின்றாள். எதிரே பார்த்திபன்.

"எப்படி இருக்கிறாய் சுமதி"

"அப்படியேதான் இருக்கிறேன்"

அந்த ஒரு வார்த்தையில் ஆயிரம் அர்த்தங்கள்.

"ஏன்..."பார்த்திபனின் இதயத்தில் இருந்து எழுந்த கேள்வி இது.

"ஜாதிதான் முக்கியம் என்று வந்த மாப்பிள்ளை களை எல்லாம் அப்போது வேண்டாம் என்றார்கள் என் அப்பாவும் அம்மாவும். ஆனால் இப்போது
எந்த மாப்பிள்ளையாக இருந்தாலும் பரவாயில்லை என்கிறார்கள். மாப்பிள்ளைதான் வந்த பாடில்லை"

சுமதியின் வார்த்தை விம்மலாக வெளி வந்தது.

"உனக்காக நான் இருக்கும்போது ஊரெல்லாம் ஏன் மாப்பிள்ளை தேடுகிறார்கள் உன் பெற்றோர்கள். கொடு பெட்டியை..." என்றான் பார்த்திபன்.

பெட்டியோடு மனசையும் சேர்த்தே கொடுத்தாள் சுமதி.

இந்தத் தீபாவளி அவர்களுக்கு இனிமையான தீபாவளி. அடுத்த தீபாவளி தலைத்தீபாவளி.

(மலேசியாவில் இருந்து வந்த மண்வாசனைக் கதை இது. அங்கும் ஜாதி என்ற ஜோதி அணையாமல் இருப்பதை இந்தக் கதையின் கரு அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறது. படிப்பவர்களுக்கு பிடித்திருந்தால் விமர்சனங்களை பதிவு செய்யுங்கள)

Sunday, September 27, 2009

தூளாகும் துயரங்கள்

மேகநதி மீதினிலே மென்காற்று நீந்திவர
          மின்னலொடு மழையாய் வீழும்
மேலெழும்பும் வெய்யோனால் மேருமலை பனியுருகி
          மீன்துள்ளும் ஆறாய் நீளும்
மோகமொடு நந்தவனம் மொய்க்கின்ற தேனீக்கள்
         முயற்சியொரு தேன்கூ டாகும்
முகமலர்ந்த சிப்பிக்குள் முந்திவிழும் நீர்த்துளிதான்
         முறுவலிக்கும் முத்தாய் மாறும்
சோகமென்ன செய்துவிடும் தூக்கியெறி துரத்திமிதி
          துன்பங்கள் விலகி ஓடும்
துவளாத மனத்தோடு துடிக்கின்ற தோள்சேர்ந்தால்
         துயரங்கள் தூள்தூ ளாகும்
பாகமொரு உடல்கொண்ட பார்வதியின் அண்ணனவன்
        படையாக நிற்கும் திருவே
பணிவோர்க்கும் எளியோர்க்கும் பரிவோடு அருள்கின்ற
        பதினெட்டாம் படிக்க ருப்பே

Friday, September 25, 2009

உலகத் தமிழ் மாநாடு உல்டாவா....?

கோயமுத்தூரில உலகத் தமிழ் மாநாடு நடக்குமுன்னு கலைஞர் கருணாநிதி அறிவிச்சு இருக்காரு. உடனே நாலா பக்கம் இருந்து கண்டனக் கணை பறக்குதுங்க.


இலங்கைத் தமிழர்களின் இன்னல்களைத் துடைக்க வக்கு இல்லாத கருணாநிக்கு உலகத்தமிழ் மாநாடு ஒரு கேடா...ன்னு சிலர் கேட்கிறாங்க.இலங்கை பிரச்சினையிலே கருணாநிதியாலே ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியலைங்கிறது உண்மைதாங்க


இப்பக்கூட இந்த உலகத் தமிழ் மாநாடு உலகத் தமிழ் மக்களின் அனுதாபத்தை பெறத்தான்னு சின்னப் பிள்ளைக்குக்கூட தெரியுமுங்க. ஆனா...கலைஞராலே ஏன் இலங்கைப் பிரச்சினையில் எதுவும் செய்ய முடியாமப் போச்சு.

கொஞ்சம் ஆழாமா பாருங்க. உண்மை தெரியும். இலங்கை பிரச்சினையில் ஏடாகூடமா கலைஞர் நடந்தா காங்கிரஸ் கட்சி என்ன செய்யும். கூட்டணிக்கட்சின்னு கூட பாக்காம திமுக ஆட்சிக்கு தில்லானா பாடிரும்.

இதைத்தானே எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்தன. உண்மையிலேயே ஜெயலலிதாவும் ராமதாசும் வைகோவும் இலங்கை தமிழ் மக்களைக் காப்பாத்தனுமுன்னா என்ன செஞ்சிருக்க வேண்டும்.




கலைஞர் இலங்கைத் தமிழர்களுக்கு குரல் கொடுக்கட்டும். நாங்க எல்லாரும் அவரு பின்னாடி நிக்கிறோம். திமுக ஆட்சியை காங்கிரஸ் கலைக்கட்டும். நாங்க யாரும் தேர்தலில் போட்டி போட மாட்டோம். ஒரு வேளை ஆதரவை மட்டும் வாபஸ் வாங்கினாங்கன்னா...தவணை முடிகிறவரை நாங்க ஆதரவு கொடுக்கிறோம்ன்னு ஒட்டு மொத்தமா சொல்லி இருக்கணுமில்லையா....அப்படிச் சொன்னாங்களா.....இல்லையே...

அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகுமுன்னுதானே எல்லா கட்சிக்காரங்களும் நினைச்சாங்க. இப்படி இருக்கும்போது அரசியலில பழம் தின்னு கொட்டை போட்ட கலைஞர் எப்படிங்க சிங்கத்தின் வாய்க்குள்ள தலையைக் கொடுப்பாரு.

இன்னொரு விஷயத்தையும் நீங்க கவனமா சிந்திச்சு பார்க்கணும். விடுதலைப்புலிகளை ஒழிக்கணுமுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருந்தவங்க ஜெயலலிதா. விடுதலைப்புலிகளின் தோல்விக்கு ஜெயலலிதாவும் ஒரு காரணமுன்னா அதுல் தப்பு இல்லைங்க.

அப்படிப்பட்ட ஜெயலலிதாகூட ராமதாசும் வைகோவும் இருந்துக்கிட்டு குய்யோ முறையோன்னு கத்தினா ஜனங்க எப்படி நம்புவாங்க. இன்னொரு விஷயமுங்க... இலங்கை அதிபர் ராஜபக்சே ஐநா சபைக்கே அல்வா கொடுத்துக்கிட்டு இருக்கிறாரு. இதுல கலைஞருக்கு காராசேவு கொடுக்க எவ்வளவு நேரமுங்க ஆகும். உலகத் தமிழ் மாநாட்டை இவங்க எதுத்தா அதனால நட்டம் கலைஞருக்கு இல்லைங்க. இவங்களுக்குத்தான். நான் கலைஞருக்கு வக்காலாத்து வாங்கலைங்க. நான் குறிப்பிட்டு இருக்கிறதை கூட்டிக் கழிச்சுப் பாருங்க. கணக்கு சரியா வரும். தப்பா இருந்தா சுட்டிக் காட்டுங்க. ஏத்துக்கிறேன்.



Thursday, September 24, 2009

சிந்திக்க வேண்டும் சினேகா

சினேகாவிடம் சில்மிஷம். வாலிபருக்கு அடி உதை. இது இன்னிக்கு வந்த பரபரப்பான செய்திங்க. இந்த அம்மா பேச்சைக் கேட்டு காவலாளிகள் அந்த வாலிபரை அடிச்சு உதைச்சு இருக்காங்க. அவரோட் மனைவி வேற பக்கத்தில இருந்திருக்காங்க.


எந்த மடையனாவது மனைவி பக்கத்தில இருக்கும் போது இன்னொருத்திக்கிட்ட சில்மிஷம் பண்ணுவானா. இது அந்த முட்டா ஜனங்களுக்கு தெரிய வேண்டாம். பத்திரிகையில வேற கொட்டை கொட்டையா செய்தி.

என்னமோ இதுவரை சினேகாவின் உடம்பில ஆம்பிளைங்கள் கையே படாத மாதிரி. பணத்தை வாங்கிக்கிட்டு சினிமாவில பப்பளப்பான நடிக்கிறாங்க. கதாநாயகன் சும்மா...புரோட்டாவுக்கு மாவு பிசையற மாதிரி புரட்டி புரட்டிப் பிசையிறான். அப்படிப்பட்ட கைபடாத உடம்புல கூட்டத்தில கை பட்டுருச்சாம்...அந்த அம்மாவோட கற்பே சந்திராயன் ராக்கெட்டுல ஏறி வான மண்டலத்துக்கு போயிருச்சாம்.




தெரிஞ்சோ தெரியாமலோ கைபட்டுருச்சுன்னா அந்த அம்மா என்ன செஞ்சிருக்கணும். கண்டும் காணாதது மாதிரி போயிருக்கணும். அது பெருந்தன்மை. பணம் வாங்கிட்டு பல்லைக் காட்டும் இவங்க. பொது இடத்துக்கு வராம இருந்திருக்கணும். ஏதோ அவங்க வாழ்க்கையில நடக்காதது நடந்திட்ட மாதிரி அதுக்கு வக்காலத்து வாங்க ஆயிரம் பேரு. இவங்களுக்கெல்லாம் வெட்கமே கிடையாதா...

அப்பாவி குடும்பப் பொண்ணுக்கு இப்படி ஒரு நிலை வந்திருந்தா இது மாதிரி கொதிச்சிருப்பாங்களா...கூட்டத்தில இதெல்லாம் சகஜம்மான்னு நீயெல்லாம் எதுக்கு கடைக்கு வாராய்ன்னு எகத்தாளமா பேசி இருப்பாங்க.

இப்ப அந்த ஆணோட நிலைய நெனைச்சுப் பாருங்க. அக்கம் பக்கத்தில இருக்கிறவங்க எல்லாம் இனிமே அவரை எப்படிப் பார்ப்பாங்க. நல்ல வேளை அவரோட மனைவி பக்கத்தில இருந்ததால சரியாப் போச்சு. இல்லாட்டி என்ன ஆகியிருக்கும்.

பொது மக்கள் பணத்தில புஸ்வானம் விடுற நடிகர் நடிகைகளும் அவங்கள பாக்க நாக்கத் தொங்கப்போட்டுக்கிட்டு திரியற ஜென்மங்களும் இனியாவது சிந்திச்சுப் பாத்து நடந்தா நல்லதுங்க.

பிரவுதேவா - நயன்தாரா - ஆறு மாதம்?

பிரபுதேவா- நயன்தாரா பத்தி பத்திரிகைகளில பரபரப்பு செய்திங்க. கல்யாணம் பண்ணிக்க போறாங்களாம். பிரபுதேவாவின் மனைவி
ரம்லத், நயன்தாராவுக்கு தர்ம அடி கொடுக்க தயாரா இருக்காங்களாம். இது எனக்கு வேதனையா இருந்துச்சுங்க. ஏன்னா எனக்கு பிரபுதேவா
நடனத்துமேல ஒரு இதுங்க. ஆனா, நயன்தாரா செய்யிறத ஏத்துக்க முடியலைங்க.

"இப்படி ஒரு பெண்ணோட வாழ்க்கையை கெடுக்குதே இந்தப் பொண்ணு....கல்யாணம் ஆகாம எத்தனையோ பசங்க திரியுறாங்களே...அவங்களில
ஒருத்தனை கவ்விக்கிட்டு போக வேண்டியதுதானே...சூடு சுரணை இல்லாத ஜென்மங்கள்"ன்னு சங்கடத்தோட சொன்னேங்க என் நண்பன்கிட்டே.


இது பத்தி அவனோட கருத்து வேற மாதிரியா இருக்குங்க. "பிரபுதேவாவின் மகன் ஒருத்தன் புற்று நோயால இறந்துட்டான். அந்த துக்கத்தை
நயன்தாரா மடியில படுத்து மறக்க நினைக்கிறாரு பிரபுதேவா.
நம்ம நயன்தாராவும் தாயன்போடு தடவி தடவிக் கொடுத்து பிரபுதேவாக்கு மருந்தா மாறி இருக்காரு. இந்த சமுதாய சேவையைப் போய் தப்பா
சொல்லலாமா"ன்னு அவன் ஒரு போடு போட்டான்.





இந்தப் பேச்சில இன்னொரு நண்பன் இடையிலே பூந்து என்னோட கேள்விக்குப் பதில் சொன்னாங்க. " நாம வேலு மிலிட்டரி ஹோட்டல்,
அஞ்சப்பன், அரசப்பன், சரவணபவன்னு எதுக்குப் போறோம். ருசியா சாப்பிடத்தானே. அது மாதிரிதான் நயன்தாரா செய்யுறாங்க. இது ஊரு
உலகத்தில நடக்கிறதுதானே...
இதுல பிரபுதேவா மனைவி வருத்தப்பட ஒன்னும் இல்லைங்க. மோகம் முப்பது நாள்...ஆசை அறுபது நாள்தானே. ஆறு மாசத்திலோ....ஒரு
வருசத்திலோ....காதல் கசக்கும். பழுத்த மரம் பாத்து பச்சைக்கிளி பறந்திரும். போன மச்சான் திரும்பி வரப்போகிறார். இதுக்கு போயி
அலட்டிக்கலாமா"ங்கிறான்.

இன்னொரு விஷயத்தையும் சொன்னான். அதைத்தான் தாங்க முடியவில்லை. " நயன்தாராவுக்கு சூடு சுரணை இல்லையான்னுதானே
கேட்டே...அவங்களுக்கு இருந்தா என்ன... இல்லாட்டி என்ன... நம்ம காசில மஞ்சக் குளிச்சு இப்படி மானங்கெட்ட வேலை செய்யிற இவங்களைப்
பாக்க நாயா அலையிறமே நமக்குத்தான் சூடும் இல்லை சுரணையும் இல்லை"ன்னு என் கன்னத்தில சப்புன்னு ஒரு அப்பு அப்பினான்.
அந்த வலி கொஞ்ச நேரத்தில் மாறிப் போச்சு. அவன் சொன்ன விஷயம் எம் மனசில் ஏற்படுத்தின வலி இன்னும் ஆறலைங்க.

இதை படிச்ச பின்னாடி உங்களுக்கும் அந்த வலி இருந்தா சொல்லுங்க.....

Wednesday, September 23, 2009

தலையாக செயல்பட்டால்....

எனக்கு கவிதையும் கொஞ்சம் வரும். அதுவும் சமுதாயம் சம்பந்தப்பட்டதா இருக்கணும்கிறது என் ஆசை. காதல் கத்திரிக் காய்ன்னு சமுதாயம் சல்லாபத்தில மூழ்கி இருக்கும் போது இதை யாரு படிக்கப் போறாங்கங்கிற சிந்தனை இருக்கத்தான் செய்யுது. என்ன பண்ணுறது பேனாவை எடுத்தா இது மாதிரி கவிதைதானே வந்து தொலைக்குது. படிப்பவங்க படிச்சதோட மட்டும் நிறுத்திக்காமே விமர்சனங்கிற பேர்ல என்னை ஒரு பிடிபிடிங்க. சந்தோஷமா இருக்கும். என்ன சரிங்களா.....


அலையாழி கோபத்தில் அதிரடிதான் நடத்தினால்
             அவனியே அழிந்து போகும்
அனல்கூடி நெருப்பாகி அதிரடிதான் நடத்தினால்
             அகிலமே அவிந்து போகும்
நிலையாக நம்மினந்தான் நிமிர்ந்தாலே நெருப்போடு
             நெடுங்கடலும் பயந்து நிற்கும்
நீருக்கு தவளையாய் நிலத்துக்கு எலியாகும்
             நிலைமைதான் மாற வேண்டும்
தலையாக எல்லாரும் தனியாக செயல்பட்டால்
            தளராதோ நமது ஆற்றல்
தகிக்கின்ற மக்களை தடம்மாற வைக்குமே
            தமிழர்கள் இணைவ தெப்போ
தெளிவான சிந்தையுடன் திடமாக நின்றாலே
           தேடிவரும் வெற்றி தானே
தீராத தீவினைகள் தீர்க்கின்ற தெய்வமே
            தீப்பாஞ் சம்மாள் தாயே!

நம்ம ஜனங்க ரொம்ப ஏமாளிங்க

சமீபத்தில ஜூனியர் விகடன்ல ஒரு செய்தி படிச்சேங்க. சென்னையில மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்கும் ரஞ்சித் குமார் என்பவருக்கு அமெரிக்காவில் வசிக்கும் மைக்கேல் ராபர்ட் என்பவர் ஒரு மின்னஞ்சல் அனுப்புறாருங்க.


நான் இந்தியாவுல தொழில் தொடங்கப் போறேன். அதுக்கும் உன்னுடைய உதவி தேவை. அதற்கான சேவைக் கட்டணமாக 10 கோடி ரூபாய் தருகிறேன். முதல்ல அதுக்கு பிணையாக 25 லட்சம் ரூபாயை வங்கியிலே செலுத்து.

முன்னபின்ன தெரியாத ஒருத்தன் உனக்கு 10 கோடி ரூபாய் தர்றேன்னதும் நாக்கை தொங்கப் போட்டுக்கிட்டு போனியே. இப்ப என்னாச்சு...அவன் மூனு நாமத்தை பட்டையா சாத்திட்டு போயிட்டான்

ஏமாந்த பின்னாடி போலீஸ் நடவடிக்கை எடுக்கலைன்னு காட்டுக் கத்தா கத்துனா என்ன அர்த்தம். இப்ப போலீசுக்கிட்ட போறியே. இவ்வளவு பெரிய தொகை கிடைக்கிறதுன்னா முன்கூட்டியே போலீசுக்கிட்ட போயி உண்மையா பொய்யான்னு தெரிஞ்சிருக்கலாமில்லை.

இன்னொரு விஷயத்தையும் நீங்க பார்க்கணும். சுளையா 10 கோடி ரூபாய தூக்கி கொடுக்க அவன் என்ன நம்மள மாதிரி கேணையனா... கிறுக்கனா...

அப்புறம் மேலும் ஒரு வருத்தமான செய்திங்க. இப்ப பாருங்க சென்னையில் ஒரு லட்சம் போட்டா அதுக்கு 48 சதவீதம் வட்டி தருவதாக சிட்டி லிமோசின் என்ற நிறுவனம் கிளுகிளுப்பாக அறிக்கை விட்டது.

அவ்வளவுதான் என்ன ஏதுன்னு விசாரிக்காமல் இருக்கிற பணத்தை அள்ளிக் கொண்டு போய் கொட்டி ஒரே நாளில் அந்தக் நிறுவனத்தின் முதலாளியை கோடீஸ்வரனாக்கி விட்டுத்தான் மறுவேலை பார்த்தாங்க நம்ம மக்கள்.




சுமார் 150 கோடி ரூபாயை ஏப்பம்விட்டுவிட்டு அந்த மோசடிக்காரன் சம்மர் ஷாட் அடித்து தலைமறைவாகிவிட்டான். ஏமாந்த மக்கள் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்திற்கு நடைபயணம் செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்தப் பேராசைக்கு என்ன காரணம். தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு சாரார் செல்வத்தில் மிதந்து ஆட்டம் பாட்டமுன்னு அதகளம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. இது சாதாரண மக்களை நிம்மதியா சாப்பிடவிடாம செய்யுற காரியமா போயிட்டது.

அதனால எப்படியாவது பணக்காரராகி விடணும்கிற ஆசையில இந்த மக்கள்... ஆப்பு கட்டையிலே அவங்களாகவே போயி உட்காந்துக்கிடுறாங்க. இது மாதிரி நல்லவங்க இருக்கிறவரை எத்தனை மோசடிக் கம்பெனி வேணுமின்னாலும் நடத்தலாமுன்னு வளைச்சு வளைச்சு சென்னையையே வட்டம் போடுறாங்க.

நம்ம சனங்க ரொம்ப நல்லவங்க. புதுசா ஒரு கம்பெனி வந்தா போதும்... பணத்தை போட போட்டி போடுவாங்க. பல கம்பெனிங்க ஏமாத்திட்டாங்களேன்னு அவங்ககிட்ட சொல்லிப் பாருங்க....அவங்க பதில் இப்படித்தான் இருக்கும்.

" நாங்க பணம் போட்டிருக்கிற கம்பெனி அது மாதிரி இல்லைங்க. எங்க முதலாளி ரொம்ப நல்லவருங்க"

அப்புறம் அவன் அல்வா கொடுத்த பின்னர்தான் 'அய்யோ... அப்பா...ன்னு' வாயிலையும் வயித்திலையும் அடிச்சுக்கிட்டு புரளுவாங்க. இவங்க வேதனை எனக்கும் வேதனைதான். மனசு வலிக்குதுங்க. ஆனா இவங்க பணத்தை அவன் வந்து திருடலை. இவங்களா போயி திருட்டுக் கொடுத்தாங்க. அதனால பாதிதான் பரிதாபப்பட முடிகிறது. பணம் ரொம்ப முக்கியம்தாங்க. அதுக்காக பறக்கிறத நம்பி இருக்கிறத இழக்கலாமாங்க...?

பணக்காரங்க ஏமாந்தா அது அவங்களுக்கு காணாம போன கைத்துண்டு மாதிரிங்க. ஏழைங்க ஏமாந்தா அது உடம்புல இருக்கிற ஒட்டுமொத்த துணி மாதிரிங்க. மானம் போயிடும். மரியாதை போயிடும். நிம்மதி போயிடும்.

இதுமாதிரி சுலபமா சம்பாதிக்கிற ஆசை இருக்கிறவங்கள நீங்க சந்திக்க நேர்ந்தா தயவு செஞ்சு அவங்க மனச மாத்தப்பாருங்க.

வெட்கமா இருக்குதுங்க

எனக்கு தமிழ் மக்களை நினைச்சா வேதனையாகவும் வெட்கமாகவும் இருக்குதுங்க. ஒரு முதலாளி வேலைக்காரனாகவும் பிச்சைக்காரனாகவும் இருக்கிற அவலம் நாகரீகம் அடையாத பல நாடுகளில இருக்கிறது சகஜம் தானுங்க.

ஆனால், இனத்தாலும் மொழியாலும் மூத்தவர்களான தமிழர்களின் போக்கு ரொம்ப விசித்திரமா இருக்குதுங்க. இவர்கள் அரசியல்வாதிகளுக்கும் அரிதாரம் பூசிய நடிகர் நடிகைகளுக்கும் ஆண்டாண்டு காலமா அடிமையா இருக்கிற அசிங்கத்தை இன்னும் உணராமலேயே இருப்பது கொடுமையா இருக்குதுங்க.

பொதுமக்கள் வாக்குப் போட்டாத்தாங்க அரசியல்வாதி அரியாசனம் ஏற முடியும். அப்படி வாக்கு போட்டு ஒரு வேலைக்காரனை உருவாக்குகிற முதலாளி அந்த வேலைக்காரனையே முதலாளியாக நினைக்கிற சிந்தனைக்கு அடிமையானது துரதிருஷ்டமுங்க.




அரசியல்வாதிகள் இருப்பது, நடப்பது, படுப்பது, சாப்பிடுவது, கோடிகோடியாக செலவு செய்வது எல்லாமே மக்களின் வரிப்பணமுங்க. ஆனா, அந்த மக்கள் ஒரு கிலோ அரிசிக்காக, அதிகாரிகள் போடும் ஒரு கையெழுத்துக்காக, ரேஷன் கார்டுக்காக, சான்றிதழ்களுக்காக படுற சிரமம் இருக்குதுங்களே அது சொல்லி மாளாதுங்க.

இதே மாதிரிதாங்க நடிகர்களுடைய கதையும்.  ஒருவேளை சோற்றுக்காக உழைத்து உருக்குலைந்து போன அடித்தட்டு மக்களின் ஒரே பொழுது போக்கு திரைப்படம்தாங்க. இவங்க கொடுக்கிற காசுல அவங்க வசதியா இருக்காங்க.
காசு கொடுத்து அவங்களை கோபுரத்தில் உட்கார வச்ச பொதுஜனம் அந்த நடிகர்களைப் பார்ப்பதற்கு நாயா அலைவதுதான் புரியலைங்க. பல நடிக...நடிகைகள் அகவாழ்க்கையிலும் புறவாழ்க்கையிலும் சரியா இல்லைங்க. அவங்கள இந்த அப்பாவி மக்கள் தெய்வமா நினைக்கிறாங்க.

ஆனா, அந்த மக்களை நடிக, நடிகைங்க எப்படி நினைக்கிறாங்க. கேவலமாத்தானே பார்க்கிறாங்க. பொது மக்கள் எல்லாம் ஒன்று கூடி ஒரு நாள் நாம தியேட்டருக்கு போயி படம்பார்க்கக்கூடாதுன்னு முடிவு எடுத்தா என்ன ஆகுமுங்க.

எவ்வளவு பெரிய நடிகரா இருந்தாலும் மூட்டை கட்டிக்கிட்டு வீட்டுக்கு போக வேணுமுங்க. இதுக்கு பொதுமக்களிடம் பொதுவான புரிந்துணர்வும் ஒற்றுமையும் இருக்கணுமுங்க. ஆனால் எல்லா கட்சி அரசியல்வாதிகளும் எல்லா மொழி திரைப்பட நடிகர்களும் அந்த ஒற்றுமை ஏற்படுவதை எந்தக் காலத்திலும் அனுமதிக்க மாட்டாங்க.

அப்படி ஒரு ஒற்றுமையும் விழிப்புணர்வும் ஏற்பட்டா ஒரே வருடத்தில இந்தியா வல்லரசு தாங்க. தயவு செய்து வலைப்பதிவாளர்கள் இதைக் கவனத்தில வச்சுக்கிட்டு இதுக்கும் ஒரு பகுதியை ஒதுக்குங்க. இதில ஏதாவது தவறு இருந்தா சுட்டிக்காட்டுங்க. இல்லைன்னா குட்டிக் காட்டுங்க. இரண்டுமே எனக்கு சந்தோசம் தாங்க.

Wednesday, September 16, 2009

தமிழ்த்தாய்க்கு முதல் வணக்கம்

முடிபுனைந்து அரசாண்ட மூவேந்தர் உயிராகி
         மூவுலகை வென்ற திருவே!
முக்கடலும் பொங்கியுனை மூழ்கடித்த போதுமெழில்
        முத்தாக விளைந்த கலையே!
இடிமழைக்கும் மின்னலொடு எழுந்தபெரும் காற்றுக்கும்
       இளகாது நின்ற மலையே!
எதிர்ப்பெனவே வந்ததெல்லாம் எரிவிழுந்த துரும்பாக
       இமயத்தில் எழுந்த ஒளியே!
அடிமுதலும் அறியாத அகிலத்தின் முன்னவளே
      அழியாது நிலைத்த வடிவே!
அருந்தவமே! செந்தமிழே! அணையாத மணிவிளக்கே!
      ஆதார மான பொருளே!
அடிதொழுது நிற்கின்றேன் அறியாத சிறுபிள்ளை
      அனுதினமும் உன்னை வணங்கி
அன்போடு எனைத்தாங்கி அருளோடு என்நாவில்
     அமிழ்தாக ஊறு தாயே!