Monday, November 2, 2009

ராசா..ராசாதி ராசா... எங்க ராசா..

என்னை பெத்த ராசா... ஏலம் போட்ட ராசா... சிக்குப்பட்ட ராசா... மொத்துப்பட்ட ராசா...ன்னு கிராமத்தில ஏடாகூடமாகத் திரிகின்ற இளசுகளப் பாத்து பெருசுங்க சொல்லுவாங்க.

இந்தப் பேச்சு இப்ப நம்ம ராசாவுக்கு பொருத்தமா இருக்கும் போல தெரியிது. அதுதாங்க... மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சரா இருக்கிறவரு.

அலைவரிசை ஒதுக்கியதில கைவரிசையக் காட்டிட்டாருன்னு எல்லாப்பக்கம் இருந்தும் இவர் மீது குற்றச்சாட்டுச் குண்டுகள் வீசப்படுதுங்க.




பாரதிய ஜனதா கட்சி பகிரங்கமாகவே ராசாவின் ஊழலைப் பத்தி பேசுதுங்க. கண்ணியில மாட்டிக்கிட்ட கதுவாளி மாதிரி ராசா வெடா வெட்டிக்கிட்டு இருக்கிறாருங்க.

என்னோட பக்கம் எந்தத் தப்பும் இல்லை. பிரதமருக்குத் தெரியாம எதுவும் நடக்கலைன்னு ஈன சுரத்தில இவர் முணங்கிறது எடுபட்ட மாதிரி தெரியலைங்க. சிபிஐ ரெய்டு வேற இவரு சிண்டைப் பிடிச்சு சிக்கெடுக்க ஆரம்பிச்சிருக்குங்க.

கிராமத்தில கொஞ்சம் கோளாறான ரெண்டு பொம்பளைங்களுக்குள்ள சண்டை வந்தா அந்தத் தெருவே நாறி நாத்தெடுத்துப் போகுமுங்க.

"அடி அறிவு கெட்ட சிறுக்கி... புருசன் பொழப்புக்கு போன நேரத்தில அரிப்பெடுத்துப் போயி அடுத்தனுக்கு பாய் விரிச்ச அவுசாரி.. இப்ப நானுந்தான் நல்லதங்காள்ன்னு நடுமனைக்கு வந்துட்டா சீவிச் சிங்காரிச்சு... இதைக் கேட்க நாதியும் இல்லை.. நாலு ஜனமும் இல்லை"ன்னு சும்மா கொசப்பேட்டை ரவுடி மாதிரி கொசுவத்தைச் சொருகிக்கிட்டு நிப்பாங்க... ஒருத்தி.

இன்னொருத்தி நல்லவளா இருந்தா என்ன சொல்லியிருக்கணும்.

"அடியே.. நாலும் கெட்ட நாதாரி... கட்டுன புருசன் கண்ணுக்குள்ள வச்சுக் காப்பாத்தும்போது... கண்ட பயலுக்கு நான் ஏண்டி கதவைத் திறக்கப்போறேன்... என்னோட வாய் சுத்தம்.. கை சுத்தம்.. மடி சுத்தம்.."ன்னு பேசுனவ வாயை பேஸ்ட் போட்டு ஒட்டணும்.

ஆனா இவ என்ன சொல்றா தெரியுமா... "அடி மூனும் கெட்ட மூதேவி.. என்னையப் பாத்தா அவுசாரின்னு சொல்றே... உன்னோடு கதைதான் ஊரு சிரிச்சுப் ஊழ நாத்தம் அடிக்குதே...மூனாவது வீட்டு முத்துக் கருப்பனோடு முந்தா நாளு முக்காடு போட்டுக்கிட்டு முந்திரிக்காட்டுக்குள்ள போனது எனக்குத் தெரியாதா.. அங்க நீங்க முக்குனதும்  முனகுனதும் மூனு ஊருக்கு கேட்டுச்சே...இதை மறந்துட்டு வாயைக் காதுவரைக்கு நீட்டி வக்கணையா பேச வந்துட்டா...வழக்கங்கெட்ட வசைகாரி"ன்னு எசைப் பாட்டுப்  பாடுனா என்ன அர்த்தமுங்க. மூக்கரையும் மூக்கரையும் மல்லுக்கட்டுறான்னுதானே அர்த்தம்.

இப்படித்தான் இருக்குங்க நம்ம ராசா நடத்தும் லாவணிக் கச்சேரி.

எதிர்க்கட்சிக்காரங்க குற்றம் சொன்னா.... "நான் அப்படிச் செய்யலை"ன்னு ஆதாரத்தோட பதில் சொல்லணுமுங்க. இல்லாட்டி "பிரதமருக்குத் தெரியாம நான் ஒன்னுமே செய்யலை"ன்னு அந்தப்பக்கம் கையைக் காட்டிட்டு ஹாயா... கொடைக்கானல்ல உட்காந்து கொட்டாவி விட்டுக்கிட்டு இருக்கணுங்க.

(ஏன்னா.. கோமணத்துக்கு வழியில்லாத ஏழைச் சனங்க கோடி கோடியா கொட்டிக்கொடுக்கிற வரிப்பணம் நீங்க குஜாலா இருக்கிறதுக்குத்தானே பாதி போகுதுங்க. அதையும் அசிங்கப்படாம அனுபவிக்கிற அஞ்சா நெஞ்சு நம்ம நாட்டு அரசியல்வாதிகளுக்கு மட்டும்தானே இருக்குதுங்க)

அதை விட்டுப் புட்டு " அலைவரிசை ஒதுக்கீட்டுல 20000 ஆயிரம் கோடிக்கு மேலே ஊழல் செஞ்சேன்னு சொல்றீங்களே...உங்க ஆட்சியில ஒரு லட்சம் கோடிக்கு மேலே நீங்க ஊழல் செஞ்சது எனக்குத் தெரியாதா"ன்னு பாரதிய ஜனதாவைப் பார்த்து அனுபல்லவி பாடிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தமுங்கன்னு என்னோடு காதுக்குள்ள கரண்டுக் கம்பியை விட்டாருங்க ஒரு சமுதாய சிந்தனையாளரு. அதை அப்படியே இங்க எடுத்துச் சொல்லி இருக்கேங்க. இதைப் படிச்சுப்புட்டு கோபத்திலே எனக்கு 'அடி'யாபிஷேகம் பண்ணிராதிங்க.

நீங்க கேட்டுக்கிட்டீங்கன்னா...என்னுகிட்ட சொன்னவர் யாருன்னு சுணக்கமில்லாம விரலை நீட்டிருவேங்க.  ஏன்னா.... காட்டிக்கொடுக்கிறதிலதான் நாம மன்னாதி மன்னன்களாச்சுங்களே....

No comments:

Post a Comment