ஒரு ஊரில் இரண்டு பிரிவு. ஆளுக்கொரு பகுதியை வைத்துக் கொண்டு சண்டை போட்டாங்க. ஒரு பிரிவு (X) முழுசும் எங்களோடது என்றது. இது எங்களுக்குச் சொந்தமான இடம். பிரித்துக் கொடுத்துவிடுங்கள் என்று இன்னொரு பிரிவு (Y) சொன்னது.
இந்த ஊருக்கு இடையில் ஒரு ஆறு.Y பிரிவும் இந்த ஊர்க்காரர்களும் ஒரே இனம். அதனால், ஆதரவுக்குரல்கள் ஓங்கி முழக்கமிட்டன.
"ஏய் தில்லு இருந்தா எங்க ஆளுமேலே கைய வச்சுப் பாரு...உன்னோட மண்டையப் பிளந்து மாவிளக்கு வச்சுடுவோம். எச்சி துப்பியே உன் இனத்தை காணாம ஆக்கிருவோம்... மூத்திரம் பேஞ்சே உன்னோட நாட்டை மூழ்கடிச்சுடுவோம்"ன்னு என மேடை போட்டு கர்ஜனை முழக்கமிட்டாங்க நிறைய பேர்.
இதன் காரணமாக X பிரிவு அச்சத்தோடு எல்லை தாண்டாமல் இருந்தது. இப்படியே ஆண்டுகள் ஓடின. இனிமேல் சும்மா இருக்கக்கூடாது என X பிரிவு அண்டை ஊர்க்காரர்களிடம் ஆதரவு தேடியது. அதற்கு ஆதரவும் கிடைத்தது.
அந்த பலத்தை வைத்துக் கொண்டு கொஞ்சம் முன்னேறியது. உடனே ஆற்றுக்கு அந்தப் பக்கம் இருந்து ஆவேசக்குரல்கள் பாய்ந்தன. இன்னும் கொஞ்சம் முன்னேறியது. இப்போதும் கூக்குரல் மட்டுமே ஒலித்தது.
இந்த நேரத்தில்தான் X பிரிவு ஒரு உண்மையைக் கண்டு கொண்டது. கூக்குரல் வந்த பக்கத்தில் கும்பல் கும்பலாக குரல்கள் வேறுபாடாக ஒலித்தன. Y பிரிவுக்கு ஆதரவு கொடுப்பதை விட ஒருவரை ஒருவர் வீழ்த்த Y பிரிவினரை பகடைக்காயாக பயன்படுத்துவதை கண்டு கொண்டது.
இது போர்க்குரல் அல்ல. வெறும் நாய்க்குரல் என்று முடிவுக்கு வந்து இறுதிக்கட்ட சண்டையில் இறங்கியது.
ஆற்றுக்கு அப்பால் இருந்து உதவி கிடைக்கும். X பிரிவினரை ஓட ஓட விரட்டி விடலாம் என கணக்குப் போட்ட Y பிரிவினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியில் அவர்கள் உயிரும் போனது . அவர்களை நம்பி இருந்த மக்கள் முள் கம்பிகளுக்கு இடையே மூச்சுவிடும் பிணங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆகா...ஆற்றுக்கு அப்பால் இருந்தவர்கள் 'டம்மி பீசு' என்பது தெரியாமல் இத்தனை ஆண்டுகளை வீணாக்கி விட்டோமே என X பிரிவினர் ஏளனத்தோடு கைகொட்டி நகைக்கின்றனர்.
இப்படி ஒரு இனமே அழிந்த பின்பும் ஆற்றுக்கு அப்பால் இருந்து இன்னும் ஆவேசக் குரல்கள் வெட்கமில்லாமல் வெடித்துக் கொண்டிருக்கின்றன.
ஒருவேளை " நாங்கள் வானத்தை வில்லாக வளைக்கிறோம். மணலைக் கயிறாக திரிக்கிறோம். ஒரு நிமிடத்தில் எதிரியை அழிக்கிறோம். ஆறுகோடி மக்களின் உயிரைத் அர்ப்பணிக்கிறோம்" என இந்த வெத்துவேட்டு வெங்காயங்கள் முழக்கமிடாமல் இருந்திருந்தால் அது ஊர்ப்பிரச்சனையாகவே இருந்திருக்கும். இந்த அழிவும் அவலமும் வந்திருக்காது என்பது என்னைப் போன்ற பலரின் கருத்து.
இந்தக் கதை புரியுதாங்க. X என்பது இலங்கைங்க. Y என்பது விடுதலைப்புலிங்க. ஆற்றுக்கு அப்பால் என்று நான் சொன்னது, நம்ம கண்டனக் கூட்ட மன்னர்கள் வசிக்கின்ற தமிழ்நாடுதாங்க. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி விட்டே அடுத்தவன் உடம்பை ரணகளமாக்குகிற இவுங்க சும்மா இருந்திருந்தா சுயபலத்தாலே விடுதலைப்புலிங்க இன்னும் கொஞ்ச நாளைக்கு தாக்குப் பிடிச்சிருப்பாங்க.
இப்ப கம்பிக்குள் இருந்து கண்ணீர் வடிக்கிற மக்களை கண்காட்சி மாதிரி பாக்கப் போயிருக்காங்க. அமெரிக்க அதிபர் ஒபாமாவையே "போடா ஹொய்யா"ங்கிறாரு நம்ம ராஜபக்சே.
நம்ம நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்க ராஜபக்சே வக்கிற விருந்தைத் தின்னுட்டு விரலை நக்கிக் கொண்டு வரவேண்டியதுதாங்க. "இங்க நடக்கிறதைப் பத்தி மூச்சுவிட்டா முட்டியை பேத்திடுவேன்" னு சொல்லித் தாங்க எல்லாரையும் அவரு உள்ளாற விட்டிருக்கிறாரு.
"நக்கின நாய் நாவெழும்பிக் குலைக்காது"ங்கிற பழமொழி மாதிரி போனமா வந்தமான்னு இவங்களும் இங்க வந்து போத்திக்கிட்டு படுக்கத்தான் போறாஙகளே ஒழிய வேற எந்தப் பிரயோசனமும் இல்லைங்க.
போன எம்பிக்கள் வந்து என்ன சொல்லப் போறாங்க. " அங்க ஒன்னுமே நடக்கல. முகாமுக்குள்ளே பாலாறும் தேனாறும் ஓடுது. இந்த ஜனங்க இருக்கிறது காட்டுப் பகுதிங்கிறதாலே சிங்கம், புலி, நாய், நரி வந்து இவங்களைக் கடிச்சிடக்கூடாதுன்னுதான் முள் கம்பி போட்டுருக்காங்க.
அங்க இருக்கிற மக்கள் இப்ப சுதந்திரமா சந்தோசமா சீட்டு, பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டமுன்னு அமர்க்களப்படுத்திக்கிட்டு இருக்காங்க.
அவங்களுக்கு ராஜபக்சே செஞ்சிருக்கிற வசதிகளைப் பாத்து கொஞ்ச நாளைக்கு அங்க தங்கி இருக்கலாமுன்னு எங்களுக்கே ஆசை வந்துச்சுன்னா பாத்துக்கங்களே" ன்னு அறிக்கை விடப்போறாங்க.
அய்யோ இதெல்லாம் சுத்தப் பொய்யின்னு போக வாய்ப்பு கிடைக்காதவங்க குய்யோ முறையோன்னு கத்தப் போறாங்க. ஆனா, உண்மையிலேயே ஈழ மக்களைக் காப்பாத்தணுமுன்னா ஆரம்பத்தில இவங்க என்ன பண்ணியிருக்கணும்
எல்லாரும் ஒத்துமையா நின்னுருக்கணுமுங்க. அங்க பாதிக்கப்படுறது எங்க இனம். அதுக்காக நாங்க என்ன வேணாலும் செய்வோம். முதலமைச்சர் கருணாநிதிக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். இந்தப் பிரச்சினையாலே திமுக ஆட்சி கலைக்கப்பட்டா எங்க ஒட்டு மொத்த ஓட்டும் திமுகவுக்குத்தான்னு நம்ம ஜெயலலிதா, ராமதாசு ஐயா, வைகோ அண்ணாச்சி அத்தனை பேரும் ஒரே மேடையில ஏறிச் சொல்லி இருந்தா மன்மோகன் மண்டையப் பிச்சுக்கிட்டு மல்லாந்து படுத்திருப்பாருங்க.
சோனியா காந்திக்கு நிமோனியா வந்து கொஞ்ச நாளைக்கு இத்தாலிக்கு இடம் பெயர்ந்திருப்பாருங்க. அதைவிட்டுப் பிட்டு கலைஞரைக் கவுக்கிறதலையே மும்முரமா இருந்தா எப்படிங்க. இதைத் தெரிஞ்சிக்க முடியாத அளவுக்கு கேணத்தனமாகவா இருக்காரு ராஜபக்சே.
"திருக்குறளைப் படிங்க.... திருக்குறளைப் படிங்க..."ன்னு அப்பாவி மக்களுக்கிட்ட தில்லாலங்கடி பாடுற தலைவர்கள் எல்லாம் முதல்ல 'அஞ்சுதல் அஞ்சாமை பேதமை'ங்க அந்த வரியை மனப்பாடம் செஞ்சுக்கிறது நல்லதுங்க.
சில காயத்தை மருந்து போட்டு ஆத்தலாம். சில காயம் தானா ஆறுனாத்தான் உண்டு. சொந்த மண்ணில் வெந்து சாகும் ஈழ மக்களும் இந்த ரகம்தாங்க.
செத்த பிணத்துக்கு முன்னாடி குத்தாட்டம் போட்டு குதூகலிக்கிற கூட்டம் நாமங்க. செத்துக் கொண்டிருக்கிற மக்களுக்கு முன்னாடி அதைச் செய்ய வேண்டாங்க. முதல்ல எல்லாரும் ஒன்னா சேருங்க. ஒத்துமையா நில்லுங்க. இமய மலையைக்கூட எலந்தப்பழம் மாதிரி தூக்கிடலாமுங்க.
சிதறி நின்னு சிலம்பாட்டம் ஆடினா....குரங்கு கூட கும்மாங்குத்து விடும்கிறத நம்ம ஜனங்க எப்பத்தான் புரிஞ்சுக்கப் போறாங்களோ
Tuesday, October 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment